நேபாளத்தின் புத்தி கண்டகி ஆற்றில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கோர்கோ மாவட்டத்தில் மூன்று பாலங்கள், 35-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பியோடினர். ஆற்றங்கரைப் பகுதிகளில் மேலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வெள்ளத்தால் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன மற்றும் கட்டுமானத்தில் இருந்த நீர்மின் திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.
बुढीगण्डकीमा आएको बाढीबाट प्रभावित केही क्षेत्रको हेलिकोप्टरबाट लिइएका तस्विर https://t.co/gPNa0jWQ8t
— NDRRMA (@NDRRMA_Nepal) October 11, 2026
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று நேபாளத்தில் 1,450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலைப்பாங்கான கோர்கா மாவட்டத்தில் உள்ள சும்னுப்ரி மற்றும் தார்ச்சே கிராமப்புற நகராடசிகளை தற்போதைய பேரிடர் கடுமையாக தாக்கி உள்ளது. சல்லேரி, கத்திகோலா, ஜகத், பகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்ளூர் ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி, உங்கிலுங் நீரோடை அருகே கால்நடை கொட்டகைகள் அடித்துச் செல்லப்பட்டதில் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். முழுமையான சேத விவரங்கள் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகின்றன.
வெள்ளப்பெருக்கில் இரண்டு தொங்கு பலங்களும், மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய ஒரு பாலமும் மொத்தமாக இடிந்து தரைமட்டமாகின.
சும்னுப்ரி பகுதியில் நியாக்செட் - சிர்திபாஸ் இடையேயான தொங்கு பாலம்; தார்ச்சே பகுதியில் மச்சிகோலா - கெரௌஜா இடையேயான பாலம் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.
ஆருகாட் பகுதியில் சோதி என்ற இடத்தில் இருந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அத்தியாசவசிய சாலைத் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆற்றங்கரையோரம் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன அல்லது நீரில் மூழ்கின. அங்கு கட்டுமானத்தில் இருந்த நீர்மின் திட்டப் பணிகளும் சேதமடைந்தன. போக்குவரத்திற்கும், அவசர சேவைகளுக்கும் இந்த பாலங்களையே பெரிதும் நம்பியிருக்கும் தொலைதூர மலைவாழ் மக்களுக்கு கடும் துயரத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது.
ஆற்றங்கரையோரத்தின் மேற்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்த திடீர் வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சும்னுப்ரி கிராமப்புற நகராட்சி வார்டு எண் 6-இல் நிலச்சரிவு காரணமாக நீரோடை அடைக்கப்பட்டு, பின்னர் பெருக்கடுத்து உடைத்தால் ஏற்பட்ட சேறு கலந்த வெள்ளமே குடியிருப்புப் பகுதிகளை பாதித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, நேபாள தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தி கண்டகி ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும்; திரிசூலி தோபான் வரையிலான ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.