சமீபத்தில் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு அஜித்தை சந்தித்து, அவர் கலந்து கொண்ட கார் ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்ததோடு, அங்கிருக்கும் ஷங்கிரி ல தி ஷ்ராட் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருந்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வரும் 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த முதல்வர் விஜய் இலக்கு நிர்ணயித்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் அவர் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல்முறையாக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
முதலில், சில்வர் ஸ்டோன் பகுதிக்கு சென்று அங்கு அஜித்தை சந்தித்து அவருடைய கார் ரேஸை தொடங்கி வைத்தார். பின்பு, அவரை பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர். இதையடுத்து, சுமார் ரூ.15,300 கோடியளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் விஜய் லண்டனில் இருந்த ஹோட்டலில் தங்கி இருந்ததை அடுத்து, அவரை பார்க்க பல நூறு ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். அவர், லண்டன் வாழ் தமிழர்களை சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால் பல பேர் இந்த விஷயம் தெரிந்து அங்கு விரைந்தனர். செப்., 15ஆம் தேதி இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாடிேயே பல பேர் இந்த இடத்திற்கு வெளியில் கூடியது, அந்நாட்டின் காவல் துறையினருக்கும், மக்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு அருகிலேயே மருத்துவமனை இருப்பதால் நோயாளிகள் சிரமமடைந்துள்ளனர்.
இது குறித்து வெளியாகும் வீடியோக்களில், முதல்வர் விஜய்யின் பர்சனல் பாதுகாவலரான மூசா, “இங்கு நீங்கள் நிற்பது டைம் வேஸ்ட்..4 மணிக்கு வாங்க” என கூறுவது சில வீடியாேக்களின் பதிவாகி இருக்கிறது.
முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக லண்டன் வாழ் தமிழரான பிரியா என்கிற பெண், நிகழ்விடத்திற்கு சென்றிருக்கிறார். தங்களுக்கு முறையான ஒரு Source-யிடம் இருந்து தகவல் வந்ததால், முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்ததாகவும், ஆரம்பத்தில் அங்கு 100 பேர் வரைதான் இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த விஷயம் பரவ ஆரம்பித்தவுடன் பல பேர் அங்கு குவிய ஆரம்பித்ததாகவும், இதனால், விஜய் மக்களை சந்திக்கும் நேரம் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்ததாகவும் தெரிவித்தார்.
இறுதியில், கூடியிருக்கும் கூட்டத்தால் பிறருக்கு சிரமம் ஏற்படுவதால் அனைவரும் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தாங்களும் கலைந்து சென்றதாக அந்த பெண் கூறியிருந்தார். விஜய்யை சந்திக்க, செய்யப்பட்டிருந்த ஏற்பாடு குறித்து பேசியிருந்த அவர், கூட்டத்தை ஒருங்கிணைக்க ஒழுங்காக அங்கு திட்டமிடப்படவில்லை என்று கூறியிருந்தார். அப்படி செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக விஜய்யை சந்தித்திருக்க முடியும் என தெரிவித்தார்.
விஜய்யை பார்க்க லண்டனில் கூடிய கூட்டத்தையும், அவர்கள் டிவிகே என எழுப்பிய கோஷத்தையும் பலர் வீடியோவாக இணையத்தில் வெளியிட்டனர். இதை பார்த்த பலர், “வெளிநாட்டில் போயுமா இப்படி மானத்த வாங்குவீங்க? உங்களால தமிழர் மானமே போச்சு..” என்று கூறி வந்தனர். இது குறித்து பேசிய பிரியா, ஏன் இப்படி நடந்தது என்தபற்கான விளக்கத்தை கூறி, அவர்கள் அப்படி தங்களை இகழ்ந்து பேசுவதினால் தளபதிக்கும் தவெகவிற்கும் தாங்கள் தரும் ஆதரவு குறையாது என தெரிவித்தார்.
முதல்வர் விஜய், தன்னுடைய 6 நாள் லண்டன் பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பியுள்ளார். காலை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை அளித்தனர். மேலும் இன்று மாலை அவர் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.