திருவண்ணாமலை மாவட்டத்தைச் மருத்துவர் தம்பதிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், தேனி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தனித்தனியே மேல்முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் இருவரும் புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளனர். 2011ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
2012ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் கார்டியாலஜி படிப்பில் மேற்படிப்பை படிக்க விரும்பியதால், மனைவி தனது பெற்றோருடன் தங்கி குழந்தையை பராமரித்து வந்துள்ளார். 2016ஆம் ஆண்டு மற்றொரு குழந்தையும் பிறந்துள்ளது. 2020ஆம் ஆண்டு கொரோனாவிற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்துள்ளனர்.
அதன் பிறகு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரச்சனை எழுந்த நிலையில், மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் இருவரும் இந்த மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ததாக தெரிகிறது.
இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள்,"நமது பண்பாட்டில் குடும்பமே அடிப்படை அலகு. பொருளாதாரத்தை ஈட்டும் பொறுப்பும், வீட்டை பராமரித்துக் கொள்ளும் பொறுப்பும் சமமான மரியாதைக்கு உரியவை.
ஆனால், மகளிர் திருமணத்தை தங்கள் பணி வாய்ப்புகளுக்கு தடையாக உணர்கிறார்கள். எனவே, மகளிர் திருமணத்தை முழுவதுமாக தவிர்க்க நினைக்கிறார்கள். திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவர்கள் வீட்டு பொறுப்பை ஏற்கும்பட்சத்தில் இந்நிலைமை மாறக்கூடும்.
பெண்களால் House Wife ஆக இருக்க முடியும் என்றால் ஆண்களால் House Hubsand ஆக இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும் என கருதுகிறோம். வீட்டு பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது, அதாவது ஆண், பெண் இரு பாலருக்கும் உரியது. மனைவி வீட்டு பராமரிப்பாளராக மேற்கொள்ளும் பணிகள் பொருளாதார மதிப்பு மிக்கவை என்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த வழக்கைப் பொருத்தவரை, கணவர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இரண்டரை கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். மனைவியும் இதற்கு ஒப்புக்கொண்டதால் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகிறது.
உத்தரவு நகல் கிடைத்ததில் இருந்து 3 மாதங்களுக்குள்ளாக ஒன்றரை கோடி ரூபாயை மனைவியின் வங்கி கணக்கிலும், ஒரு வருட காலத்திற்குள் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் 50 லட்சம் ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்து நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இந்த தீர்ப்பு பரந்தளவில் கவனம் பெற்றுள்ளது. வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதேநேரத்தில், இந்தியாவில் திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். புள்ளிவிவரங்களும் அதையே நிறுவுகின்றன.
திருமணம் பெண்களின் வேலைக்கு தடையாக இருப்பதால், பல இந்திய பெண்கள் திருமணத்தை தவிர்க்கின்றனர். தேசிய புள்ளியியல் அலுவலகம் அளித்த தரவுகளின் அடிப்படையில், 2011ஆம் ஆண்டில் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 13.5% ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 19.9% ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த அளவிற்கு திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாலேயே, பெண்கள் திருமணத்தை நிராகரிக்கின்றனர் என அர்த்தம் இல்லை. இருப்பினும், பல பெண்களுக்கு திருமணம் நடைபெறும் வயது உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்துள்ளது.
சொந்தமாக வருமானம் ஈட்டுவதால், திருமணத்திற்கான நிதி நெருக்கடி என்பது குறைந்திருக்கிறது. வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வதில் நீடிக்கும் சமத்துவமின்மை, தாய்மை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில் ரீதியான சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ உள்ளிட்ட கவலை ஆகியவை ஒரு சில பெண்களுக்கு திருமண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க செய்துள்ளன. அதேநேரத்தில், பாதுகாப்பான அல்லது மனநிறைவான வாழ்க்கைக்கு திருமணம் அவசியம் என்று பல பெண்கள் கருதுவதில்லை என்றும் தெரிகிறது.