மதுரை அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று (செப். 25) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் மேடையில் உயர்நீதிமன்ற நீதிபதி உரையாற்றி வந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே ஜெனரேட்டர் இயக்கப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.
ஏற்கெனவே பலமுறை அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்விலேயே மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அதன் X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. TANGEDCO மதியம் 12.26 மணிக்கு அளித்த விளக்கத்தில், "ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள 110 KV அழகர்கோவில் - பசுமலை மின்பாதையில் இன்று காலை 11:22 மணியளவில் மின்பாதை துண்டிக்கப்பட்டதன் (jumper cut) காரணமாக மின்பாதை பழுதடைந்து மின்தடை ஏற்பட்டுள்ளது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தற்போது பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்; இன்னும் சுமார் 2 மணி நேரத்தில் மின்விநியோகம் சீரமைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அவரின் X தளத்திலும் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். ஆனால், TANGEDCO அளித்த விளக்கத்திற்கு சற்று முரணாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது அமைச்சரின் விளக்கத்தில், "நிகழ்ச்சி வளாகம் ஜெனரேட்டர் மூலமே இயக்கப்பட்டு வந்தது; ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின் இணைப்பை மாற்றியதன் காரணமாகவே 5 விநாடிகள் மின்தடை ஏற்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு அமைச்சரின் X பக்கத்தில் மதியம் 12.16 மணிக்கு பதிவிட்டப்பட்டிருந்தது. அமைச்சர் அறிவிப்புக்கு 10 நிமிடத்திற்கு பின்னரே TANGEDCO விளக்கம் அளித்துள்ளது.

அழகர்கோவில் - பசுமலை மின்பாதையில் Jumper Cut காரணமாக மின்பாதை பழுதடைந்து மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சரின் பதிவில் ஜெனரேட்டர் மாற்றத்தால் ஏற்பட்ட 5 வினாடி மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மின்வெட்டுக்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்வெட்டு குறித்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஒரு காரணத்தையும், TANGEDCO ஒரு காரணத்தையும் வெளியிட்ட நிலையல், தற்போது TANGEDCO அதன் X பதிவை தற்போது அதன் பக்கத்தில் நீக்கியிருக்கிறது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
@TANGEDCO_Offcl has deleted this post https://t.co/x323ElknRF
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) September 26, 2026
மின்வெட்டு குறித்து கூறிய காரணம் தவறு என்பதால் பதிவு நீக்கப்பட்டதா அல்லது அமைச்சர் வேறு காரணம் தெரிவித்துவிட்டார் என்பதால் நீக்கப்பட்டதா என்பது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மேலும் படிக்க | தலைமுடி வெட்டியது ஒரு பிரச்னையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி? வேதனையில் மேயர் பிரியா