8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!
8th Pay Commission: நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட 8வது ஊதிய குழுவிடம் ஒரு முக்கிய முன்மொழி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு விதி மாற்றப்படக்கூடும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகளுடன் குழு கலந்தாவுக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. பல்வேறு பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகளைப் பெறவும், கள நிலவரங்களை மதிப்பிடவும் இக்குழு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஊழியர் சங்கங்களுடன் கூட்டங்களை நடத்தி வருகிறது.
8வது ஊதியக் குழு கூட்டங்கள்
இக்கூட்டங்களில் ஊழியர் சங்கங்கள் தீவிரமாகப் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை ஆணையத்திடம் வெளிப்படையாக முன்வைத்து வருகின்றன. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவிடம் மற்றொரு முன்மொழிவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு விதி மாற்றப்படக்கூடும்.
கம்யூடட் பென்ஷனுக்கான விதி மாற்ற கோரிக்கை
- ஊழியர் சங்கங்களின் கோரிக்கை 'முன்கூட்டியே பெறப்படும் ஓய்வூதியத் தொகை' (commuted pension) தொடர்பான மறுசீரமைப்பு கால அளவைப் பற்றியது.
- தற்போதைய விதிமுறைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40% வரை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் (அதாவது, ஒரு பகுதியை மொத்தத் தொகையாக முன்கூட்டியே பெறலாம்).
- அதற்குப் பதிலாக, அரசு அவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து அந்த முன்கூட்டியே பெறப்பட்ட பகுதியைக் கழித்துக்கொள்கிறது.
- தற்போதைய விதிகளின்படி, இவ்வாறு கழிக்கப்பட்ட தொகை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுமையாக வழங்கப்படத் தொடங்குகிறது (அதாவது பிடித்தம் நிறுத்தப்படுகிறது).
ஊழியர் சங்கங்களின் வாதம் என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நேரத்தில் அடுத்த 98 மாதங்களுக்கான (8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்) ஓய்வூதியத்திற்கு இணையான தொகையை அரசு முன்கூட்டியே வழங்குகிறது. அதற்கு ஈடாக, இத்தொகை 15 ஆண்டுகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
முன்கூட்டியே வழங்கப்படும் தொகையானது 8 ஆண்டுகள் 2 மாதங்களுக்கு (98 மாதங்கள்) மட்டுமே போதுமானதாக இருக்கும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு (180 மாதங்கள்) பிடித்தம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை என்று ஊழியர் சங்கங்கள் வாதிடுகின்றன.
வட்டியுடன் சேர்த்து முழுத் தொகையும் வெறும் 11 முதல் 12 ஆண்டுகளுக்குள்ளேயே திரும்பப் பெறப்பட்டுவிடுகிறது. எனவே, இந்த 15 ஆண்டு கால அளவை 10 முதல் 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் 8-வது ஊதியக் குழுவிடம் பரிந்துரைத்துள்ளன.
ஓய்வூதியதாரர்களுக்கு நியாயம் கோரும் NC JCM
'கூட்டு ஆலோசனைக் கட்டமைப்பின் தேசியக் குழு' (National Council of the Joint Consultative Machinery) இந்த முழு விஷயத்தையும் ஒரு உதாரணம் கொண்டு விளக்கியுள்ளது. ₹100 மதிப்பிலான முன்கூட்டிய ஓய்வூதியத் தொகையை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
முதலாவதாக, இது 8.194 என்ற 'மாற்றுக் காரணியை' (commutation factor) அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மாதாந்திர ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை 'கம்யூட்' (commute) செய்யும்போது (அதாவது அந்தப் பகுதியை முன்கூட்டியே மொத்தத் தொகையாகப் பெறும்போது), அதற்கு ஈடான 8.194 ஆண்டுகளுக்கான (தோராயமாக 8 ஆண்டுகள் 2 மாதங்கள்) தொகையை அரசு முன்கூட்டியே மொத்தமாக வழங்குகிறது.
61 வயதில் ₹100 மாதாந்திர ஓய்வூதியத்தைக் கம்யூட் செய்யும்போது, தோராயமாக ₹9,833 மொத்தத் தொகையாகக் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து, அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து ₹100 பிடித்தம் செய்யப்படுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது: 10 ஆண்டுகளில் மொத்தம் ₹12,000 பிடித்தம் செய்யப்பட்டு, கம்யூட் செய்யப்பட்ட தொகை அந்த காலத்திற்குள்ளேயே திரும்பப் பெறப்பட்டுவிடுகிறது என்றால், ஏன் அந்தப் பிடித்தம் 15 ஆண்டுகள் வரை தொடர்கிறது?
இந்த கேள்வியைத்தான் ஊழியர் சங்கங்கள் கேட்கின்றன. 15 ஆண்டு விதி உருவாக்கப்பட்ட காலத்திற்கும் இப்போதுள்ள நிலைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர் சங்கங்கள் சுட்டிக்காட்டும் முக்கிய வித்தியாசங்களில் சில:
- அசல் மாற்றுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது இருந்த பொருளாதார மற்றும் மக்கள்தொகைச் சூழல் இன்று இல்லை.
- வட்டி விகிதங்கள் மாறியுள்ளன.
- மாற்றுக் காரணிகள் மாறியுள்ளன.
- ஆயுட்காலம் மாறியுள்ளது.
- தொடர்ச்சியான ஊதியக் குழுக்களின் மூலம் ஓய்வூதிய அமைப்பே பல திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.
- ஆயினும், ஓய்வூதியத்தை மீண்டும் தொடங்கும் காலம் 15 ஆண்டுகளாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட பல நியாயமான காரணங்களால், ஓய்வூதியதாரர்களின் இந்த நியாயமான கோரிக்கையும் நிறைவேறும் என நம்பப்படுகின்றது. கம்யூடட் பென்ஷன் விதி மாற்றப்பட்டால், அது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
மேலும் படிக்க | மாத சம்பளம் ரூ.20,000: EPF மற்றும் EPS கணக்குகளில் எவ்வளவு பங்களிப்பு இருக்கும்?