அக்னிவீர்களுக்கு மத்திய அரசின் மெகா அறிவிப்பு: சேவை காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்வு
Agniveer Service Extended: அக்னிபத் திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றம் செய்துள்ளது. இதன்படி, அக்னிவீர்களின் சேவைக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 25% அக்னிவீர்கள் வழக்கம்போல் நிரந்தர ராணுவப் பணியில் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ள 75% பேருக்கு 2 ஆண்டுகள் கூடுதல் சேவை வழங்கப்பட்டு, அதன் பின்னரும் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவால் தற்போது சேவை நிறைவடைய இருந்த 18,000க்கும் மேற்பட்ட அக்னிவீர்கள் பயனடைவார்கள்.
புது டெல்லி: தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு அக்னிவீர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னிவீர்களின் சேவைக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் அதிக திறமையும் சிறந்த செயல்திறனும் கொண்டவர்களுக்கு நிரந்தர ராணுவப் பணிக்கான வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. அக்னிவீர் சேவை நீட்டிப்பு குறித்து மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன? அதன விவரங்களை பார்ப்போம்.
அக்னிவீர் சேவை நீட்டிப்பு குறித்து மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அக்னிவீர்களின் சேவைக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இதுவரை அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அக்னிவீர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேவையாற்ற முடிந்தது. அதில் 25% பேருக்கு மட்டுமே நிரந்தர ராணுவப் பணியில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது புதிய மாற்றத்தின் அடிப்படையில், மீதமுள்ள 75% அக்னிவீர்களுக்கும் கூடுதலாக 2 ஆண்டுகள் சேவை நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் மொத்த சேவைக் காலம் 6 ஆண்டுகளாக அதிகரிக்கிறது.
சிடிஎஸ் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அறிவிப்பு
இந்த திட்ட மாற்றத்தை இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியான (CDS) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அறிவித்தார். அமைச்சரவை முடிவுகளைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், அக்னிவீர்களின் செயல்திறனை தொடர்ந்து மதிப்பீடு செய்ததில் மிகவும் நேர்மறையான கருத்துக்களே கிடைத்ததாக தெரிவித்தார்.
அக்னிவீரர்களின் முதல் குழு தற்போது தங்களது 4 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிப்படுத்திய ஒழுக்கம், திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.
மேலும் படிக்க - பயணிகளுக்கு அதிர்ச்சி.. பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. கர்நாடக அரசு அறிவிப்பு!
அக்னிபத் திட்டத்தில் எத்தனை சதவீத பேருக்கு நிரந்தர பணி?
அக்னிபத் திட்டத்தின் ஆரம்ப விதிமுறைகளின்படி, திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் 25% அக்னிவீர்கள் மட்டுமே நிரந்தர ராணுவ சேவையில் இணைக்கப்படுவார்கள். இந்த நடைமுறை தொடரும் என்றும், அதேசமயம் மீதமுள்ள 75% பேரும் உடனடியாக சேவையை விட்டு வெளியேறாமல் மேலும் 2 ஆண்டுகள் சேவையாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆண்டுகளுக்குப் பிறகும் புதிய வாய்ப்பு கிடைக்குமா?
அக்னிபத் திட்டத்தின் கீழ் சேவை நீட்டிப்பு பெறும் அக்னிவீர்கள் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக பணியாற்றிய பின், விருப்பமுள்ளவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு முறையின் மூலம் மீண்டும் ஆயுதப்படைகளில் நிரந்தரமாக இணையும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதனால் முன்னதாக இருந்ததை விட அதிகமான அக்னிவீர்களுக்கு நீண்டகால ராணுவ வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
அக்னிபத் திட்டம்: ஊதியம் மற்றும் சலுகைகளும் உயருமா?
அக்னிபத் திட்டத்தின் கீழ் சேவை நீட்டிப்பு பெறும் அக்னிவீர்களுக்கு கூடுதல் காலத்திற்கு ஏற்ப உயர்த்தப்பட்ட ஊதியமும் பல்வேறு கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என்று சிடிஎஸ் ஜெனரல் ராஜா சுப்ரமணி தெரிவித்தார். இதன் மூலம் அக்னிவீர்களின் பொருளாதார பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னிபத் திட்டம் சேவை நீட்டிப்பு மூலம் யாருக்கு பயன்?
சில வாரங்களில் சுமார் 18,000 அக்னிவீர்கள் சேவையிலிருந்து விடுவிக்கப்பட உள்ள சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய முடிவின் காரணமாக அவர்கள் அனைவரும் கூடுதல் இரண்டு ஆண்டுகள் பணியில் தொடரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு குறித்த கவலைகள் குறையும் என கருதப்படுகிறது.
அக்னிபத் திட்டம் சேவை நீட்டிப்பும் தேர்தல் அரசியலும்
இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேரும் பழக்கம் உள்ளது. அக்னிபத் திட்டத்தின் பயனாளர்களாக உள்ள அவர்களுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதால், இந்த முடிவு தேர்தல் சூழலிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்னிபத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்
2022-ல் அறிமுகமான அக்னிபத் திட்டத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இந்த சேவை நீட்டிப்பு கருதப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை தற்போது 6 ஆண்டுகளாக மாறியுள்ளது. மேலும், நிரந்தர சேவைக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அக்னிவீர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.