Commercial LPG Price Hike: தீபாவளிக்கு முன்னதாக சாமானிய மக்களுக்கும், வணிகர்களுக்கும் சற்று கவலையளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. நவம்பர் 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
நவம்பர் 1ஆம் தேதியான இன்று 19 கிலோ சிலிண்டரின் விலை 10 ரூபாய் முதல் 11.50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஒவ்வொரு ஆங்கில மாதமும் 1ஆம் தேதி அன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை மாற்றமியமைக்கும். டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் விலை 11.50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், தள்ளுவண்டி உணவகங்கள், ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், பேக்கரிகள், உணவு உற்பத்தி கூடங்கள் ஆகியவற்றில் இந்த விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தும்.
| நகரம் | இன்றைய விலை உயர்வு | இன்றைய விலை |
| டெல்லி | ரூ.10 | ரூ.2,820 |
| மும்பை | ரூ.10 | ரூ.2,774.50 |
| கொல்கத்தா | ரூ.10 | ரூ.2,964 |
| சென்னை | ரூ.11.50 | ரூ.2,994.50 |
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அன்று டெல்லியில் அதிகபட்சமாக ரூ.62.50 உயர்ந்தது. தொடர்ந்து வணிக ரீதியான சிலிண்டர் விலை உயர்ந்து வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.2,043.50 என்ற விலையில் விற்பனையான சிலிண்டர், தற்போது வரை ரூ.951 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையே இரண்டு மாதங்கள் ஓரளவு விலை குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாமர மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதற்கு முன் கடந்த ஜூன் 7ஆம தேதி அன்று 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 29 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. அதற்கு முன் மார்ச் 7ஆம் தேதி அன்று ரூ.60 அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேற்காசியாவில் நிலவும் பதற்றம் உள்பட உலகளவில் நிலவும் எரிபொருள் விலை உயர்வே, எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுக்கும் காரணமாகும்.
| நகரம் | விலை நிலவரம் |
| டெல்லி | ரூ.942 |
| கொல்கத்தா | ரூ.968 |
| மும்பை | ரூ.941.50 |
| சென்னை | ரூ.957.50 |
கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களை தவிர்த்து பெரியளவில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. பிப்ரவரி மாதம் ரூ.868.50 என்ற விலையில் செனனையில் விற்பனையான வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது வரை 88.5 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.107.76, டீசல் ரூ.99.55, CNG ரூ.99.50 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.