விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அரசின் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று (அக். 31) நடைபெற்றது. இதனை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களுக்கு பணி ஆணைகளையும் வழங்கினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
பொருளாதாரத்துறை பேராசிரியர் கலையரசன் கைது தொடர்பான கேள்விக்கு, "தவறாக நடந்துள்ளது என்று அறிந்து முதல்வரே கலையரசனை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த முதலமைச்சரும் அப்படி நடந்து கொண்டதில்லை. காவல்துறை இப்படியான தவறான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது" என்றார்.
அமைச்சர் கீர்த்தனா சாதிப் பெருமை குறித்து பேசியது குறித்த கேள்விக்கு, "அமைச்சரே விளக்கம் கொடுத்துள்ளார். வருணாசிரம கட்டமைப்புக்குள் பெண்களும், தலித்துகளும் அடங்கமாட்டார்கள். இதனைத் தெரிந்தவர்கள் யாரும் இப்படி பேச மாட்டார்கள், பேசியிருக்கக் கூடாது" என்றார்.
திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (31.10.26) நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ், புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் அருட்தந்தை திரு. சகாயராஜா மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர். @VanniTamizhVCK @DistrictColVpm @CommrTindivanam #VanniArasu #SocialJustice #Tindivanam #TamilNadu
— Office of Social Justice Minister (@OffVanniArasu) October 31, 2026
சத்திரியன் என்று சொல்வதற்கும், சத்திரியர் மகளிர் பள்ளியில் படித்தேன் என்று சொல்வதற்கும் பெருமையாக இருக்கிறது என அமைச்சர் கீர்த்தனா தான் படித்த பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மாணவர்களிடையே நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காகவே தான் அந்தப் பள்ளி விழாவில் அவ்வாறு பேசியதாக விளக்கம் அளித்தார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தலைவர் திருமாவளவனை அறிக்கை கொடுத்துள்ளார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப் போவதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இலங்கையில் இனப்படுகொலைக்கு காங்கிரஸ், திமுக, விசிக தான் காரணம் எனக்கூறிதான் சீமான் கட்சி ஆரம்பித்தார். தற்போது திமுக ஆதரவு அளிக்கிறது என்றவுடன் தட்டேந்தி செல்வது யார்?. ஈழத் தமிழர் விவகாரத்தில் சமரசமின்றி களமாடி வருபவர் திருமாவளவன்.
யாருடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் எங்கள் கொள்கையில் இருந்து மாற மாட்டோம். திமுக பிரியாணி போடுகிறது என்பதற்காக தட்டெந்துவது சந்தர்ப்பவாதம். நாம் தமிழர் தம்பிகள் சந்தர்ப்பவாதிகளிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இப்படியான பிழைப்புவாதிகளை முன்னிறுத்த போகிறீர்களா...?" என்றும் எதிர்க்கேள்வி எழுப்பினார்.
தவெக அரசுக்கு ஜீரோ மதிப்பெண் என பேசிய எடப்பாடி பழனிச்சாமி கருத்து குறித்து, "ஒரு ஜீரோ, ஜீரோ பற்றி பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. மக்கள் பிரச்சனைகளை மாவட்ட வாரியாக ஆராய்ந்து செயல்பாட்டை முன்னெடுக்கும் அரசாக ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதனை பொறுக்க முடியாமல் ஜீரோ என கூறியுள்ளார். அதிமுக கட்சி ஜீரோ ஆவதை இபிஎஸ் நிறுத்த வேண்டும்" என்றார்.
சிறுமிகள் தொடர்ச்சியாக காணாமல் போவது குறித்த கேள்விக்கு, "குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக டிஜிபி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார், எந்த விதமான பதட்டமும் தேவையில்லை. செஞ்சி சிறுமி வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என காவல்துறை கூறியுள்ளனர். சிறுமிகள் கடத்தப்பட்டதை தடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது" என தெரிவித்தார்.