உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பேரணிக்கு சென்ற புல்டோசர் மோதியதில், 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த சிறுவன் பாஜக நிர்வாகியின் மகன் என்பதால், ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் எழுந்துள்ளன. அகிலேஷ் யாதவின் நேற்றைய (நவ. 18) பேரணிக்கு அந்த புல்டோசர் சென்றிருக்கிறது. செல்லும் வழியில் சிறுவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது உத்தர பிரதேச அரசியலில் பெரும் மோதலாக வெடித்துள்ளது.
சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. அதில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது புல்டோசர் மோதியதுடன், அது அவன் மீது ஏறிச் செல்வதும் பதிவாகி உள்ளது. சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சிறுவன் பாஜக நிர்வாகி ஓம்கார் சிங் ஸ்ரீவென்ட் என்பவரின் மகன் என்றும் அவன் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் தெரிகிறது. அவரது சகோதரியை அழைத்து வருவதற்காக அருகில் உள்ள ஜங்ஷன் நோக்கிச் சென்றுபோது, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
சிறுவனின் குடும்பத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது கோரக்பூர் பாஜக எம்பியும், நடிகருமான ரவி சிங் உடன் இருந்தார். இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சியினரே காரணம் என்று யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டினார். கோரக்பூர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக விளங்குகிறது.
சமாஜ்வாதி கட்சியினர் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு புல்டோசர் மூலம் சிறுவனை கொன்றதாக கடுமையாக சாடினார். உயிரிழந்த சிறுவன் 1922ஆம் ஆண்டு நடைபெற்ற சௌரி சௌரா வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும்; அவரது மரணம் மன்னிக்கவே முடியாத கொடூரச் செயல் என்றும் குறிப்பிட்டார்.
#WATCH | Gorakhpur: Uttar Pradesh CM Yogi Adityanath meets the bereaved family of the 12-year-old boy who died after being hit by a bulldozer during a PDA (Pichhda (Backward Classes), Dalit, and Alpsankhyak (Minorities) led by SP chief Akhilesh Yadav) rally in Gorakhpur. BJP MP Ravi Kishan is also present with him.
— ANI (@ANI) November 19, 2026
மேலும், "நேற்று சமாஜ்வாதி கட்சியின் குண்டர்கள் ஒரு சிறுவனை புல்டோசர் மூலம் நசுக்கிக் கொன்றுள்ளனர். முதலில் அந்த சிறுவன் மீது புல்டோசர் மோதி உள்ளது. பின்னர் அவர் மீது ஏற்றிச் சென்றுள்ளனர்" என சாடினார்.
குற்றவாளிகள் வளர்வதற்கு சமாஜ்வாதி கட்சி அனுமதிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், சாலைகளில் வன்முறை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடியும் கொடுத்துள்ளார். சிறுவனின் மரணத்தை பாஜக அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். அதேபோல், அரசியல் தலைவர்கள் பொது வெளியில் பேசும்போது கண்ணியமான மொழியைப் பயன்படுத்த வேண்டும் என யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.