Jharkhand Jamshedpur Bank Robbery : ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை சமீபத்தில் நடந்திருக்கிறது. கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட தங்கம் மற்றும் ரொக்கம் வங்கியில் இருந்து பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூர் நகரில் கோல்முரி பகுதியில் இயங்கி வந்த கனரா வங்கியின் கிளையில்தான் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று (செப். 24) இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட வங்கி கிளையின் தலைமை மேலாளர் அஜித் குமார், கோல்முரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9.10 மணிமுதல் காலை 10.18 மணிவரை கொள்ளையர்கள் வங்கியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மொத்தம் 33.62 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. இதில் 43 லட்ச ரூபாய் ரொக்கமாக மட்டும் திருடப்பட்டுள்ளது. 23 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
போலீசார் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, முகமூடி அணிந்து, ரெயின் கோட் அணிந்த 5 கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி வங்கிக்குள் நுழைந்துள்ளனர். உள்ளே சென்று துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டி ஒட்டுமொத்த வங்கியையும் தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.
வங்கியின் கவுன்டர்களில் இருந்து கொள்ளையர்கள் பணத்தை பறித்துள்ளனர். லாக்கரை திறக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். வங்கியில் நகைக்கடன் வைத்திருந்தவர்களின் தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தின் போது, வங்கி ஊழியர் ஒருவர் கொள்ளையர்களை எதிர்த்து செயல்பட்டுள்ளார். அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியின் கைப்பிடியால் தாக்கியதில் அந்த ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. அனைத்தையும் கொள்ளையடித்த பிறகு, அந்த குற்றவாளிகளும் அங்கிருந்து ஓடி சென்று தப்பித்துள்ளனர். சற்று தூரம் சென்று அங்கிருந்து இரண்டு பைக் மூலம் தப்பிச் சென்றுள்ளனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மூத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஏராளமான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வங்கி வளாகத்தில் ஆதாரங்கலை சேகரித்தனர். அதேவேளையில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் அடங்கிய குழுக்களும் சம்பவம் இடத்தை ஆய்வு செய்துள்ளன.
வங்கி மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தப்பித்துச் சென்ற வழி குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனற். ஜம்ஷெத்பூரின் பல்வேறு பகுதியில் போலீசார் தேடுதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குற்றவாளிகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் ஒரு பகுதியாக நகர் முழுவதும் அவர்கள் பதுங்கியிருக்கக்கூடிய இடங்களில் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கும் சூழலில், காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வுக் குழுவை தலைமை தாங்கும் சுபம் குமார் கண்டேல்வால் கூறுகையில், "சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்த சில தகவல்களை சேகரித்துள்ளோம். குற்றவாளிகளை கண்டறியும் வகையில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றார்.