India at UN: ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. பயங்கரவாதம், ஜனநாயகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களில் இஸ்லாமாபாத் முன்வைத்த வாதங்களை இந்தியத் தூதர் பெட்டல் கெஹ்லோட் (Petal Gahlot) தவிடுபொடியாக்கியுள்ளார்.
நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் பதிலடியையும் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெஹ்லோட், பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உண்மையை உணர்த்தும் வகையில் பேசினார்.
ஐ.நா.வில் பாகிஸ்தானுக்குப் பதிலளித்துப் பேசிய பெட்டல் கெஹ்லோட்,
"இன்று மதியம், பாகிஸ்தான் பிரதிநிதியிடமிருந்து சில விசித்திரமான கருத்துகளைப் பொதுச் சபை கேட்டது. பயங்கரமான 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25-வது ஆண்டு நிறைவை நியூயார்க் நகரமும் உலகமும் நினைவுகூரும் வேளையில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன," என்று கூறினார்.
மேலும் பெட்டல் கெஹ்லோட் கூறியதாவது: "இந்தச் சூழலைக் கருத்தில் கொள்வது அவசியம்; ஏனெனில், அந்தத் தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடன், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கியப் பயிற்சி அகாடமிக்கு மிக அருகிலேயே வசித்து வந்தான். இன்று பாகிஸ்தான் பிரதிநிதி மிகுந்த மரியாதையுடன் தலைவணங்கிய அதே நிறுவனம்தான் அது. ஆனால், பாகிஸ்தான் மக்களே 'படிவம் 47 (Form 47) அரசாங்கம்' என்று அழைக்கும் ஒரு அமைப்பிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்."
#WATCH | New York | Exercising the right of reply of India on Pakistan PM Shehbaz Sharif's speech, First Secretary in India's Permanent Mission to the UN, Petal Gahlot says, "This afternoon, the General Assembly heard some bizarre remarks from the representative of Pakistan. This… pic.twitter.com/ICH056qzQB
— ANI (@ANI) September 26, 2026
பாகிஸ்தானின் பொய்களுக்குப் பின்னாலுள்ள உண்மையை இந்தியா வெளிப்படுத்தியது. ஐ.நா.வில் பாகிஸ்தான் ஜனநாயக உரிமைகள் மற்றும் மனிதாபிமான விழுமியங்கள் குறித்துப் பேசியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நிலவும் சூழல் குறித்த உண்மையை இந்தியா உலகிற்கு வெளிப்படுத்தியது.
பெட்டல் கெஹ்லோட் மேலும் கூறுகையில்,
"தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவே தலைநகரைப் பலப்படுத்திப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு அரசாங்கத்திடமிருந்து, ஜனநாயக உரிமைகள் மற்றும் மனிதாபிமான விழுமியங்கள் குறித்த பாசாங்குத்தனமான பேச்சை நாம் கேட்டோம்," என்றார்.
கடுமையான பதிலடியை அளிக்கும் வகையில் கெஹ்லோட் தொடர்ந்து பேசுகையில், "தலைவர் அவர்களே, இது நடப்பதற்குக் காரணம், இந்த அரசாங்கம் ராணுவத்தினுடையது, ராணுவத்தால் அமைந்தது மற்றும் ராணுவத்திற்காகவே செயல்படுவது ஆகும். அவர்களின் கைப்பாவைத் தலைவர்கள் வரலாம், போகலாம்; ஆனால் உண்மையான முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதில் எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது. பாகிஸ்தானின் 27-வது சட்டத் திருத்தம் மற்றும் அதன் உண்மையான ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் பாதுகாப்பு ஆகியவை அந்நாட்டின் எதார்த்த நிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன," என்று குறிப்பிட்டார்.
"இந்தப் பிரச்சினையின் மையமாக இருப்பது பாகிஸ்தான் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதமாகும். பயங்கரவாதிகளுக்குத் தப்பி ஓடவோ அல்லது மறைந்து கொள்ளவோ இடமே இருக்காது என்பதை நாங்கள் கடந்த ஆண்டே நிரூபித்துக் காட்டினோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக தம்மைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை நாங்கள் தொடர்ந்து நிலைநாட்டுவோம். பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களுக்குத் தக்க விளைவுகள் ஏற்படும்... பாகிஸ்தானின் பிரதிநிதி அந்நாட்டைப் பற்றித் தவறான பிம்பத்தை உருவாக்க முயன்றாலும், பாகிஸ்தானையும் அதன் கொள்கைகளையும் அவற்றின் உண்மையான தன்மையிலேயே இந்தச் சபை அடையாளம் காணும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பொய்களை ஆண்டுதோறும் திரும்பத் திரும்பக் கூறுவதால் அவை உண்மையாகிவிடாது. பாகிஸ்தானின் பயங்கரவாதம், ஏமாற்று வேலைகள் மற்றும் இரட்டை வேடம் ஆகியவை அதற்கோ அல்லது உலகிற்கோ எந்த நன்மையையும் அளிக்கப்போவதில்லை," என்று கெலாட் கூறினார்.
ஐ.நா. பொதுச் சபை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த கருத்துகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது, இப்போதும் அப்படித்தான் இருக்கிறது, எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.