இந்தியாவின் பிரபலமான தொழில் நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கிறது டிவிஎஸ் குழுமம். தற்போது, இவர்களின் குடும்பத்தில் ஒரு பெரும் சொத்து பிரச்சனை வெடித்துள்ளது. இந்த பிரச்சனையின் ஆணிவேர் என்ன? இது தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
டிவிஎஸ் குழுமத்தின் மூத்த தலைவராக இருக்கிறார், வேணு ஸ்ரீனிவாசன். இவருடைய மகளான லக்ஷ்மி வேணு, தன் குடும்ப சொத்தில் இருந்து தனக்கு சம பங்கு வேண்டும் என்று கூறி, தனது தந்தையின் டிவிஎஸ் குடும்பக் கிளைக்குச் சொந்தமான கூட்டுக் குடும்பச் சொத்துக்களை சட்டப்பூர்வமாகப் பிரிக்குமாறு கோரியுள்ளார்.
இது குறித்து தன் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் அவர், குடும்பத்தலைவராக உண்மையான மற்றும் நேர்மையான முறையில் சொத்துகளை பொறுப்பாக பிரித்து தருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் (2005-ல் திருத்தப்பட்டது), குடும்பச் சொத்தில் தனக்குச் சமமான பங்குக்கு உரிமை உண்டு என்று லக்ஷ்மி வேணு வாதிட்டுள்ளார். அச்சட்டத்தின் 6-வது பிரிவை மேற்கோள் காட்டி, மூதாதையர் சொத்தில் மகன்களுக்கு உள்ள அதே உரிமைகள் மகள்களுக்கும் உண்டு என்றும், அவர்கள் சுயமாக அதன் பிரிவினையைக் கோரலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது கேள்விக்குட்பட்டிருக்கும் சொத்துகளில், வி.எஸ் ட்ரஸ்ட் மற்றும் பிற ஹோல்டிங் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் குடும்ப பங்குகளும் அடங்கும். இவை, 2020ஆம் ஆண்டின் டிவிஎஸ் குடும்பத்தின் மேற்பார்வையின் கீழ் வேணு சீனிவாசன் கிளைக்கு ஒதுக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் சொத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் மற்றும் சுந்தரம் கிளேட்டன் ஆகியவற்றில் இருக்கும் பங்குகளும் இதில் அடங்கும்.
இந்த சொத்து பிரச்சனையின் மையப்புள்ளியாக இருக்கிறார், லக்ஷ்மி. இவர், 2020ஆம் ஆண்டில் நடந்த தன் குடும்பத்தின் சொத்து பாக பிரிவினையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரைப்பொருத்தவரை, வேணு சீனிவாசன் குடும்பத்திற்குள் எந்தவொரு தீர்வு அல்லது சொத்துப் பிரிவினையும் தொடங்கப்படவோ அல்லது முடிக்கப்படவோ இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும், குடும்பத்தின் தொழில்களை ஒருவர் பார்த்துக்கொள்வதாலேயே அந்த நபர் சொத்தில் முழு உரிமை கோர முடியாது என்றும், இது பிற குடும்ப உறுப்பினர்களுக்கான சட்டப்பூர்வமான சொத்து உரிமையையும் அவரால் நீக்க முடியாது என்ற வாதத்தையும் முன் வைக்கிறார்.
2020ஆம் ஆண்டில், டிவிஎஸ் குழுமத்தின் 4 பெரிய குடும்ப கிளைகளுக்கு இடையே சொத்து பிரிப்பு ஒப்பந்தமானது கையெழுத்தாகி இருக்கிறது. அதன்படி, வேணு சீனிவாசன் பிரிவுக்கு டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், டிவிஎஸ் கிரெடிட் மற்றும் சுந்தரம் கிளேட்டன் ஆகிய நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது வேணு சீனிவாசனின் நேரடி குடும்பத்திற்குள்ளேயே சொத்து பிரிப்பு தொடர்பாக பிளவு ஏற்பட்டிருக்கிறது.
லட்சுமி வேணு தன்னுடைய நோட்டீஸில், “2025ல், தம்பி சுத்ர்சன் வேணு டிவிஎஸ் மோட்டார்ஸின் முக்கிய உரிமையாளராக அறிவிக்கப்பட்டதால், வணிகங்களின் பெரும்பகுதி தந்தைக்கு செல்லக்கூடும்” என்பதை சுட்டிக்காட்டி லட்சுமி எழுதியிருந்தார்.
தனக்கு உரிமையுள்ள சலுகைகளைப் புறக்கணித்து, குடும்பச் சொத்துக்களில் உள்ள பெரும்பான்மை பங்கு தன் சகோதரர் சுதர்ஷனுக்குச் சாதகமாகக் குவிக்கப்பட்டுள்ளது என்று லட்சுமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், இந்த சூழல் சட்டப்பூர்வமாக இல்லை என்றும் நம்பிக்கை மீறிய பிரச்சனை என்றும் விவரித்திருக்கிறார். அவரது வாதத்தின்படி, மகள்களின் உரிமைகள் ஒருதலைப்பட்சமான முடிவுகள் அல்லது நிறுவன ஏற்பாடுகள் மூலம் பிடுங்கிக்கொள்ளப்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நோட்டிஸ் கொடுக்கப்பட்டபோதும், லக்ஷ்மி தான் ஒரு சுமூகமான தீர்வை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் ஒரு நியாயமான செயல்முறையின் மூலம் இந்தச் சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மார்ச் 2024ஆம் ஆண்டு, குடும்ப உறுப்பினர்களிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி மகன் சுதர்சனிற்கு ஒதுக்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.83 லட்சம் கோடியாக உள்ள நிலையில், மகள் லட்சுமிக்கு ஒதுக்கப்பட்ட சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.2,400 கோடியாக மட்டுமே இருக்கிறது.
இந்த சொத்து பிரச்சனையில், லக்ஷ்மியின் தாயாரான மல்லிகா சீனிவாசன், தன் மகளுக்கு ஆதரவாக இருக்கிறார். தன் மகளுக்கும் குடும்ப சொத்தில் முழு உரிமை இருப்பதாக குறிப்பிடும் அவர், இதுவரை இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயற்சித்த போதும் அதற்கு பலன் இல்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, தன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் குடும்ப சொத்து விவகாரத்தில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
”ஒரு தாயாராக, என் மகன் மற்றும் மகளுக்கு அனைத்து விஷயங்களிலும் அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். என் மகள் லக்ஷ்மி அனைத்து குடும்ப சொத்துகளிலும், மகன் சுதர்சன் போல் சம உரிமை உள்ளவர்” என இது குறித்து பேசும் போது மல்லிகா குறிப்பிட்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய இந்த சொத்துகள் தன்னுடைய கூட்டுக்குடும்ப சொத்துகள் அல்ல என கூறியிருக்கும் வேணு சீனிவாசன், அவை தன்னுடைய சுய சம்பாத்தியம் மற்றும் தனிப்பட்ட சொத்துகள் என கூறியிருக்கிறார். மேலும், அவற்றை யார், யாருக்கு எவ்வாறு பிரித்து கொடுப்பது என்பதில் தனக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு என்றும் தெரிவித்திருக்கிறார்.
வேணு சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கௌரவ தலைவர் மற்றும் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் தலைவராக இருக்கிறார். மல்லிகா சீனிவாசன், அமால்கமேஷன் குழுமத்தை சேர்ந்த TAFE எனும் அவரது தாய்வழி சொத்து டிராக்டர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
மகளான லட்சுமி வேணு, முத்த வாரிசு. இவர், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் TAFE நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கிறார்.
மகன் சுதர்சன் வேணு, இளைய வாரிசு. இவர், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
இந்து வாரிசுரிமை திருத்த சட்டம் 2005 படி, கூட்டுக்குடும்ப சொத்துகளில், மகள்களுக்கு மகன்களுக்கு சமமான பிறப்புரிமை மற்றும் பங்கை வழங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இச்சட்டம், செப்டம்பர் 9ஆம் தேதி 2005 முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்து கூட்டுக்குடும்ப சொத்துக்களில் மகன்க்ளை போலவே மகள்களும் இணை சொத்து வாரிசுகளாக கருதப்படுகின்றனர்.
மகன்களுக்கு உள்ள அதே சொத்துரிமையும், அதே சட்டப்பூர்வ பொறுப்புகளும் மகள்களுக்கும் பொருந்தும்.
இருப்பினும், 2004 டிசம்பர் 20ஆம் தேதிக்கு முன்பு செய்யப்பட்ட பாகப்பிரிவினை ஆவணங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவுகளா மூலம் பிரிகப்பட்ட சொத்துகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று கூறப்படுகிறது.