Central Government Employees Salary and Pension: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. வங்கி ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணாக, மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் பென்ஷன் ஆகியவை முன்கூட்டியே வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
நாளை (செப். 25) மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) வரும் செப்டம்பர் 28ஆம் தேதி (திங்கள்) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி (புதன்) வரை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களில் 90 சதவீதத்தினர் இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் வேலை, அதாவது வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள கணக்குத் தலைமை கட்டுப்பாட்டாளர் வெளியிட்ட அலுவலக குறிப்பாணையின்படி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செப்டம்பர் 25ஆம் தேதி அன்று வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, அஞ்சல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட மத்திய அரசின் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என தெரிகிறது. அதேபோல், மத்திய அரசின் தொழில் துறை ஊழியர்களுக்கான சம்பளமும் நாளையே வெளிவரலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ஓய்வூதியத் தொகையையும் வங்கிகள் மற்றும் PAO அலுவலகங்கள் அதே நாளில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகைகள் முன்கூட்டியே வழங்கப்படும் ஊதியமாகவோ அல்லது ஓய்வூதியமாகவோ கருதப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. முழு மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதியம் கணக்கிடப்பட்ட பிறகு ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால், அது அடுத்த மாதத்திற்கான தொகையில் இருந்து ஈடுசெய்யப்படும் என தெரிகிறது.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சங்களும் துறைகளும் இந்த அறிவுறுத்தல்களை உடனடியாக தங்களின் அலுவலகங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த அறிவுறுத்தல்களை வங்கிகளின் பணம் செலுத்தும் கிளைகளுக்கு தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் திங்கள் முதல் புதன் வரை வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், இந்த வாரம் ஞாயிறு அன்று (செப். 27) வாடிக்கையாளர்களுக்கு வசதியளிக்கும் வகையில் மண்டல கிராமிய வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வேலைநிறுத்தம் தொடரும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம்கள், பிசினஸ் கரஸ்பாண்டன்ட் மையங்கள், யுபிஐ போன்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை பயன்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.
அதேபோல் வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் வகையில் வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாகவே அத்தியாவசியமான பரிவர்த்தனைகளை நிறைவு செய்துகொள்ளுமாறும் வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன. இது நடப்பு செப்டம்பர் மாதத்தின் 2வது வேலைநிறுத்தமாகும்.
இதற்கு முன் செப்டம்பர் 11ஆம் தேதி (வெள்ளி) வங்கி வேலைநிறுத்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.