Dinesh Karthik Latest News: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆர்சிபி அணியின் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சிவப்பு, மஞ்சள் துண்டுடன் நடந்து வருவது போன்று ஆரம்பிக்கும் AI தயாரித்த வீடியோவை இன்று பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவின் தொடக்கத்தை கண்ட சில, தினேஷ் கார்த்திக் தவெகவில் இணைந்துவிட்டார் போல சட்டென அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஆனால், வீடியோவை முழுமையாக பார்த்து, அதன் கேப்ஷனை அதன் முழுமையான நோக்கம் தெரியும்.
தினேஷ் கார்த்திக் அவரது பதிவில், "நீங்கள் எனக்கு ஆரவாரத்தையும், அன்பையும், ஒரு இரண்டாவது வீட்டையும் கொடுத்தீர்கள்" என தெரிவித்துள்ள அவர் கர்நாடக மக்களுக்கு இனிய கர்நாடக தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக மாநில கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு நிறத்தில் துண்டு அணிந்து தினேஷ் கார்த்திக் நடந்து வந்து, ஒரு ஆட்டோவில் ஏறி, பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கு ஆர்சிபி ஜெர்ஸி அணிந்த சிறுவன், தினேஷ் கார்த்திக்கிடம் கர்நாடக கொடி மற்றும் ஆர்சிபி கொடியை கொடுக்கிறான்.
இந்த வீடியோ கர்நாடக மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களும் கமெண்டில் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர்கள் சிலருக்கு மஞ்சள், சிவப்பு கொடி கர்நாடகா கொடி என தெரியாது என்பதால் அது தவெக உடையது என தவறாக நினைத்துள்ளனர். இதை சிலர் கமெண்டிலும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் 2024ஆம் ஆண்டில் ஆர்சிபி அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றார். முதல் 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பையே இல்லாமல் இருந்த ஆர்சிபி அணி 2025, 2026 என கடைசி இரண்டு சீசன்களில் அடுத்தடுத்து கோப்பையை வென்றிருக்கிறது. இதனால், ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடக மக்கள் மத்தியில் தினேஷ் கார்த்திக்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, அது இந்த வீடியோவின் மூலமும் உறுதியாகிறது.
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஓடிஐ, 60 டி20ஐ போட்டிகளில் விளையாடி உள்ளார். 167 முதல் தர போட்டிகள், 260 லிஸ்ட் ஏ போட்டிகள், 415 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிலும் 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத் லயன்ஸ், கேகேஆர், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
2015ஆம் ஆண்டிலும், 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலும் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடி ஓய்வுபெற்றார். அதன்பின் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார். இவர் தலைமையில் தமிழ்நாடு அணி 2006-07, 2020-21 சீசன்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
1953ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக மொழிவாரி மாநிலமாக தெலுங்கு பேசும் பகுதிகளை ஒன்றிணைத்து தனியாக ஆந்திர பிரதேசம் உதயமானது. 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று முழுமையான அளவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கன்னடம் பேசும் பகுதிகள், மலையாளம் பேசும் பகுதிகளும் தனியாக பிரிக்கப்பட்டன. அப்போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. அன்றைய தினமே கர்நாடகா உருவானது. அதை கர்நாடக தினம் என ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கன்னட மக்கள் கொண்டாடுகின்றனர். இப்போது இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.