ரூ.14.20 கோடி பிரசாந்த் வீரை கழட்டிவிட பிளான்..? சிஎஸ்கேவின் வியூகம் என்ன...? Explained
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக ரூ.14.20 கோடிக்கு வாங்கப்பட்ட பிரசாந்த் வீரை விடுவிக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. அவரை விடுவிக்க காரணங்கள் என்ன? நன்மைகள் என்ன? அடுத்த கட்ட பிளான் என்ன? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ஐபிஎல் 2027 குறித்த பேச்சுகள் இப்போதே பரபரப்பான நிலையை எட்டிவிட்டன. ஒவ்வொரு அணிகளும் 20வது ஐபிஎல் சீசனில் தங்களது ஸ்குவாடை பலப்படுத்த தயாராகி வருகின்றன.
ஒரு பக்கம் டிரேட் பேச்சுவார்த்தை மற்றும் மறுபக்கம் எந்த வீரர்களை தக்கவைக்கலாம், யார் யாரை ஏலத்திற்கு விடுவிக்கலாம் என அணி உரிமையாளர்களை விட ரசிகர்கள் அதிக விவாதித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | IPL Retentions... தேதியை தள்ளிவைத்த பிசிசிஐ - என்ன காரணம்?
நவம்பர் 17 டூ டிசம்பர் 16 வரை
- நவம்பர் 17ஆம் தேதிக்குள் வீரர்கள் தங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். முன்னர் நவம்பர் 15ஆம் தேதியாக இருந்து தற்போது இரண்டு நாட்கள் நீட்டித்து, நவம்பர் 17 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். நவம்பர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பக் காலம் நவம்பர் 23ஆம் தேதிவரை நீளும்.
- டிசம்பர் 1ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும் வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்கும்.
- ஐபிஎல் அணிகளின் தேர்வுகளின் அடிப்படையில், ஏலத்தில் விடப்படும் வீரர்களின் பட்டியல் மற்றும் செட்களின் விவரம் ஆகியவை டிசம்பர் 3ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்.
- வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் ஐபிஎல் நடைபெற இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம்
- இந்தச் சூழலில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு தயாராகி வருகிறது. ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் பெற சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- ஏற்கெனவே, சிஎஸ்கே அணி அதன் தலைமை பயிற்சியாளரையும், பயிற்சியாளர் குழுவையும் புதிதாக நியமித்துள்ளது. தற்போதைய சிஎஸ்கே ஸ்குவாட் ஸ்டீபன் பிளமிங் மற்றும் அதன் குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
- புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜாகீர் கான் தலைமையிலான சிஎஸ்கே பயிற்சியாளர் குழு இந்த ஸ்குவாடில் தேவைப்படும் வீரர்களை வைத்துக்கொண்டு, அதிக தொகையுடனும், அவசியமின்றியும் இருக்கும் வீரர்களை ஏலத்திற்கு விடுவிக்க திட்டமிடும்.
- கடந்த மினி ஏலத்தில் பெரிய தொகையை கொடுத்து இரண்டு வீரர்களை எடுத்தது. தலா ரூ.14.20 கோடி கொடுத்து பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகிய இருவரை சிஎஸ்கே எடுத்திருந்தது. இந்நிலையில், பிரசாந்த் வீரை விடுவிக்கும் முடிவில் சிஎஸ்கே இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
- Cricbuzz தளத்தின் தகவலின்படி, ஒரே சீசனில் பிரசாந்த் வீரை விடுவித்துக்கொள்ள சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், சிஎஸ்கே அணி டிரேட் அல்லது ஏலம் மூலம் இந்திய இடது கை ஸ்பின் ஆல்-ரவுண்டரை எடுக்க திட்டமிடும்.
மேலும் படிக்க | CSK வரும் ரபாடா? கூடவே ஒரு தமிழக வீரர்.. குஜராத் செல்லும் ருதுராஜ் - பெரிய முடிவு!
பிரசாந்த் வீரை விடுவிப்பது ஏன்?
- அபுதாபியில் கடந்தாண்டு நடந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே மட்டுமின்றி லக்னோ, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் போட்டாபோட்டி போட்டன. 6.4 கோடி ரூபாயில் இருந்து 14 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே உடன் ஹைதராபாத் போட்டியிட்டது.
- உத்தர பிரதேச ஆல்-ரவுண்டரான பிரசாந்த் வீர் இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் ஆவார். சஞ்சு சாம்சன் டிரேட் காரணமாக ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு கொடுக்கப்பட்டார். ஜடேஜா இல்லாத காரணத்தால் இந்திய ஸ்பின் ஆல்-ரவுண்டர் ஒருவரை எடுக்க வேண்டும் என்பதற்காக பிரசாந்த் வீரை அதிக தொகை கொடுத்து சிஎஸ்கே எடுத்தது.
- பெரிய தொகை கொடுத்து எடுக்கப்பட்ட நிலையில், பிரசாந்த் வீர் கடந்த சீசனில் கடுமையாக சொதப்பினார். பிரசாந்த் வீர் 6 போட்டிகளில் (5 இன்னிங்ஸ்) விளையாடி 90 ரன்களை மட்டுமே அடித்தார். அதுவும் ஆர்சிபி போட்டியில் 43 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
- பந்துவீச்சில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமே 2 ஓவர்களை மட்டும் வீசி விக்கெட் எதையும் அவர் எடுக்கவில்லை. இவருடன் ரூ.14.2 கோடிக்கு எடுக்கப்பட்ட கார்த்திக் சர்மா பேட்டிங்கில் 11 போட்டிகளில் 295 ரன்களை குவித்திருந்தார். அவர் மிடில் ஆர்டரில் கைக்கொடுக்கிறார் என்பதால் அவரை சிஎஸ்கே இந்த சீசனில் விடுவிக்க வாய்ப்பில்லை.
பிரசாந்த் வீரை விடுவிப்பதால் நன்மை என்ன?
- தற்போது சிஎஸ்கேவின் பர்ஸ் தொகை ரூ.2.4 கோடி ஆகும். இந்த ஏலத்திற்கு ரூ.5 கோடி அதிகரிக்கப்படும். எனவே, தற்போதே ரூ.7.4 கோடி சிஎஸ்கேவிடம் உள்ளது.
- இதில் பிரசாந்த் வீரை விடுவித்து, வேறு யாரையும் விடுவிக்காவிட்டால் கூட சிஎஸ்கேவின் மொத்த பர்ஸ் தொகை ரூ.21.6 கோடியாக இருக்கும். அதேநேரத்தில் சில வெளிநாட்டு வீரர்கள் உள்பட சிலரை விடுவிக்க திட்டமிடும் என்பதால் இன்னும் தொகை அதிகமாகலா்ம்.
- பிரசாந்த் வீரை வேறு யாரும் வாங்காவிட்டால் குறைந்த தொகையில் சிஎஸ்கேவே மீண்டும் அவரை எடுத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில், ஸ்குவாடுக்கு தேவையான வீரரை அதிக தொகையில் எடுக்க நல்ல வாய்ப்பு ஏற்படும்.
- வரும் நவம்பர் 14ஆம் தேதி சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி இத்தொடர் நிறைவடையும்.
- சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் என்பது உள்நாட்டு டி20ஐ தொடராகும். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நிச்சயம் ஐபிஎல் அணிகளில் இடம் கிடைக்கும். பிரசாந்த் வீருக்கும் தனது திறனை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
முடிவாக...
ஒவ்வொரு அணியும் இதுபோன்ற பெரிய வீரர்களை விடுவிக்கும் திட்டத்தில் இருக்கும். எந்த வீரரை விடுவித்தால், ஸ்குவாடுக்கு பெரிய பாதிப்பு இருக்காதோ அவர்களை அந்த அணி விடுவிக்கும். இதில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய தொகை கொண்ட வீரரை விடுவிக்க திட்டமிடுவதால் மினி ஏலத்தில் கிடைக்கும் ஒரு சில முக்கிய வீரர்களை சிஎஸ்கேவால் எடுக்க முடியும். இது சிஎஸ்கேவுக்கு கூடுதல் சாதகமாகும்.
மேலும் படிக்க | 3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!