தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டும் வகையில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையின் அடிப்படையில், அந்நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும். உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
கூட்டுறவுத் துறையில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு, நிகர லாபம் ஈட்டும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்.
கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை - தமிழ்நாடு அரசு உத்தரவு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | https://t.co/BmIF4pUHcE
— TN DIPR (@TNDIPRNEWS) November 2, 2026
அதேபோல், போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 400 வீதம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 44,573 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.49.69 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கும் 2025-2026ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் என தமிழ்நாட்டில் மொத்தம் 18 சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. இதில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ், கருணைத் தொகை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குதல் #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | https://t.co/k6zjYD4cmS
— TN DIPR (@TNDIPRNEWS) November 2, 2026
அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி - II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,190 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ரூ.351.40 லட்சம் செலவினம் ஏற்படும்.