கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலரத வீதியில் ஜவுளிக்கடை ஒன்றில் இன்று ஒரு நாள் 1000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புடவைகள் 199 ரூபாய்க்கு வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விளம்பரங்களை பார்த்து சென்னை, கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வாகனங்கள் மூலம் இந்த ஜவுளி கடைக்கு காலையிலேயே வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் கடைக்கு வந்த பொதுமக்களிடம் தனியார் ஜவுளிக்கடை ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் சுமார் 300 நபர்களுக்கு மட்டுமே இந்த ஆப்பர் வழங்கப்பட்டதாகவும், ஆப்பர் முடிந்துவிட்டதால் உங்களுக்கு இனிமேல் 199 ரூபாய்க்கு பட்டுப்புடவை வழங்க இயலாது என கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதைக் கேட்டு பல ஊர்களில் இருந்து கடலூரில் இருக்கும் கடையை தேடி வந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் கடை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடை ஊழியர்கள் சிலரும் பொதுமக்களிடம் அவதூறாக பேசியதாகவும், ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
பாலியல் குற்றங்கள் நடக்கின்றன, அதைப் பற்றி நீங்கள் யாரிடமும் புகார் அளிக்க மாட்டீர்கள், ஆனால் இலவசமாக கிடைக்கும் புத்தாடைக்காக பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறீர்கள் என ஊழியர்கள் கூறியதால் பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். பொதுமக்களும் கடைக்குள் புகுந்துவிட்டனர். வாக்குவாதம் இரு தரப்பிலும் வலுத்துள்ளது.
மேலும் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் கூறுகையில், "இவர்கள் இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து 199 ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்க வந்தோம். அதே போல் எங்கள் உறவினர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வரவழைத்தோம். ஆனால் இவர்கள் கடைக்கு வந்தவுடன் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த விளம்பரத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் 1000 ரூபாய் பட்டுப்புடவை 199 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் தற்போது சில நபர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு இருந்ததாக கூறுகிறார்கள்.
நீங்கள் செல்லுங்கள் உங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைப்பதாக காலையில் இருந்து காத்திருந்தும் அலைகழித்து வருகின்றனர். ஒரு சிலர் அவதூறாக பேசியும் கடையை விட்டு வெளியே போ என ஒருமையில் பேசியும் கடைக்கு வந்த பொது மக்களிடம் ஊழியர்கள் அநாகரிமான முறையில் பேசினர்" என குற்றஞ்சாட்டினர்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில், "பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வைத்து இந்த கடைக்கு வந்தபோது இவர்கள் விளம்பரம் மூலம் பொது மக்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது. எனவே விளம்பரத்தை பார்த்து யாரும் இனிமேல் ஏமாற வேண்டாம்.
அவர்களுக்கு தேவையான பொருட்களை நேராக சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். இதுபோல விளம்பரத்தை பார்த்து இனிவரும் காலங்களில் யாரும் ஏமாற வேண்டாம் என" கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களை ஏமாற்றிய இந்த கடை மீதும், பொதுமக்களிடம் மரியாதையின்றி நடந்துகொண்ட கடை ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.