தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அன்று மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதும் ஒரு வழக்கமாக உள்ளது. பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கு குதூகலமாக இருந்தாலும் சூற்றுச்சூழல் ரீதியாக சில பாதிப்புகளும் அதில் உள்ளன.
நீர், நிலம், காற்று ஆகியவை பட்டாசு வெடிப்பதால் மாசுபாடு அடையும் என்பதால் பட்டாசு வெடிப்பதில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி கடும் கட்டுப்பாடு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பட்டாசு வெடிப்பதால் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் காற்று மாசடைந்து, காற்றின் தரக் குறியீடு மோசமான நிலையை எட்டியதையும் கடந்த காலங்களில் பார்த்திருப்போம்.
ஆனால், தமிழ்நாட்டிலும் சரி, தென் மாநிலங்களிலும் சரி பெரியளவில் காற்று மாசுபாடு இருக்காது. இந்நிலையில், தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டாலும் கூட, கிழக்கு திசை காற்று அதை நீக்க வாய்ப்புள்ளது என்று சுயாதீன வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
காற்று மாசுக்கும், பருவ காற்றுக்கும் என்ன சம்பந்தம்...?, அதேபோல, தென் இந்திய பகுதிகளில் காற்று குறைந்திருப்பதற்கான காரணம் குறித்து தனியார் தொலைக்காட்சி சேனலில் இதுகுறித்து ஹேமச்சந்தர் விரிவான தகவல்களுடன் இதை விவரித்துள்ளார்.
அதில் அவர், "தமிழ்நாட்டில் தீபாவளி ஒட்டி அவ்வப்போது பெய்யக்கூடிய மழைப்பொழிவு என்பது இடையூறாகப் பார்க்கப்பட்டாலும், சுற்றுச்சூழலுக்கு மிக சாதகமானதாக அது பார்க்கப்படுகிறது.
அதாவது, கிழக்கு திசைக்காற்று - அதாவது கடலில் இருந்து ஈரப்பதமான காற்று வருகை தந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அந்த பட்டாசுகளால் ஏற்படக்கூடிய காற்று மாசை விலக்கி, நம் பகுதிக்கு ஈரப்பதமான ஒரு தெளிவான காற்றை கொண்டுவரும். இது வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் காற்று மாசு கட்டுக்குள் இருப்பதற்கு மிக சாதகமாக அமைகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் தற்போது 2ஆம் சுற்று மழை பதிவாகி அவ்வப்போது வரக்கூடிய மழைப்பொழிவின் காரணமாக காற்று மாசு குறைந்து வருகிறது. இதுவே வடகிழக்கு பருவமழையில் இடைவெளி நாட்களில் இருந்தது என்றால், வறண்ட வாடைக் காற்றுதான் வீசும். அதாவது, வடக்கு திசையில் இருந்து வறண்ட காற்றின் போக்குதான் இருக்கும். அது வட இந்தியாவில் இருக்கக் கூடிய காற்று மாசுபாட்டையும் எடுத்து வந்து தமிழ்நாட்டிலும் காற்று மாசை மேலும் அதிகரிக்கும்" என்று விளக்கம் அளித்தார்.
இந்த ஆண்டைப் பொருத்தவரை தற்போது கிழக்கு காற்றின் ஊடுருவல் இருக்கிறது என்றும் அதன் காரணமாக காலை நேரத்தில் பட்டாசுகள் வெடித்தாலும், அந்த காற்று மாசு என்பது அடுத்த சில மணிநேரங்களிலேயே கட்டுக்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
எனவே, தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஈரப்பதமான கிழக்கு திசைக்காற்று மற்றும் பருவக்காற்று தீபாவளி பண்டிகைக் காலகட்டத்தில் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் அமையும் ஒரு காரணியாக நிகழ்ந்திருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதனால், தீபாவளி அன்று மழை பெய்வது நல்லதாக பார்க்கப்படுகிறது.