தவெகவை விமர்சித்தால் இப்படியா... இது பாசிசமா? பாயாசமா? - CM விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
மூத்த பத்திரிகையாளர் அருண் ராம் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து கட்டுரை எழுதிய மறுநாளே அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு, "இது பாசிசமா? பாயாசமா? என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம், Times of India நாளேட்டின் சென்னை பதிப்பு ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான அருண் ராம் அவரது குழுவினரோடு முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டன.
இந்தச் சூழலில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்று தவெக அரசை விமர்சித்து அதே Times of India நாளேட்டில் பத்திரிகையாளர் அருண் ராம் 'A Hero's silence, a party's shame' (ஒரு நாயகனின் மௌனம், ஒரு கட்சியின் அவமானம்) என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சர் உடனான சந்திப்பு - பதிவு நீக்கம்
இந்நிலையில், அருண் ராம் உடன் முதலமைச்சர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அருண் ராம் அவரது பேஸ்புக் பதிவில் நேற்று (நவ. 17) குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த Screen Shot புகைப்படங்களுடன் போட்ட பதிவில், "கடுமையான குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சித்து நான் கட்டுரை எழுதிய மறுநாளே... சட்ட விதிகளின்படி இந்த பதிவு (ஜூலை 21 அன்று முதலமைச்சரை TOI குழுவினர் சந்தித்த புகைப்படங்கள்) இந்தியாவில் காணக் கிடைக்காது என இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பு வந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
பாசிசமா? பாயாசமா? - ஸ்டாலின் கேள்வி
இந்நிலையில் அருண் ராமின் பதிவை குறிப்பிட்டு, இது பாசிசமா? பாயாசமா? முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் அருண் ராம், தவெகவினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய உத்தரவு...?
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?. கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?" என பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க | தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
இவருக்கே இந்த நிலையா...?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா என்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா என்றும் கடுமையாக சாடி உள்ளார்.
பேராசிரியர் கலையரசன் கைதும்... விமர்சனமும்...
பிரபல பொருளாதார நிபுணரும், மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் ஏ. கலையரசன் அக்டோபர் 28ஆம் தேதி அன்று அதிகாலை மணியளவில், இரவு உடையில் அவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலையரசன் சமூக வலைதளங்களில் விலைவாசி உயர்வு குறித்துப் பேசியதால் கைது செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. ஆனால், போலி இன்ஸ்டாகிராம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், அந்த கணக்கில் போராசிரியர் கலையரசனின் புகைப்படம் மற்றும் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்ததை ஒட்டி தவறுதலாக காவல்துறை அவரை அழைத்துச் சென்றுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரமும் தவெக அரசின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியது. பின்னர் முதலமைச்சர் விஜய், முனைவர் கலையரசனை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu (திராவிட மாடல்: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை விளக்குதல்) என்ற புத்தகத்தின் ஆசிரியர்களுள் ஒருவர் கலையரசன் என்பது கவனிக்கத்தக்கது.