கையில் பிடித்து... வானில் சென்று வெடிக்கும் பட்டாசு... தமிழ்நாடு அரசு முக்கிய அட்வைஸ்
பட்டாசு வெடிபொருட்கள் சந்தையில் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம் என்றும் பாதுகாப்பே முதன்மையானது என்றும் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
வானில் உயரமாக சென்று வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு மழை பெய்வது நன்மையா...? டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் விளக்கம்
என்னென்ன பாதிப்புகள் வரும்...?
தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்தாண்டு பட்டாசு வெடிபொருட்கள் சந்தையில் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் இருந்து தகவல் வரப்பெற்றுள்ளது.
இதுபோன்று வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கும்போது தலை, முகம், கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன், விரல்கள் சிதைவடைதல், கண் பார்வை பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது" என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை
குறிப்பாக குழந்தைகளை பெற்றோர்கள் எக்காரணம் கொண்டும் இதுபோன்ற பட்டாசுகளை பயன்படுத்த அனுமதிக்ககூடாது என்றும்; பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக, அதிக வெடிப்புத் திறன் கொண்ட பட்டாசுகள், வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் மற்றும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்தான பட்டாசுகளை ஒருபோதும் கையில் பிடித்து வெடிக்கக் கூடாது என்றும்; தற்போது சந்தையில் கிடைக்கும் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
வாளியில் தண்ணீர் முக்கியம்
எனவே, பட்டாசுகளை எப்போதும் தரையில் வைத்து, பாதுகாப்பான தூரத்தில் நின்று மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்; வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடித்து மகிழுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும்; மேலும் பட்டாசு வெடிக்கும் இடத்தில் பாதுகாப்பு கருதி வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பட்டாசு விபத்துகள் இல்லாத மகிழ்ச்சியான பண்டிகையைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது.
மேலும் படிக்க | அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!