சென்னை: சென்னைவாசிகளே உஷார்!! நாய் அல்லது பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து, அவற்றுக்கான உரிமத்தைப் பெற்றிருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், பொது இடங்களில் செல்லப்பிராணிகளைத் தனியாகவோ அல்லது கவனிக்க ஆளின்றியோ விட்டுச் சென்றால், இனி பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படலாம். இந்த விதிமுறையை பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அமல்படுத்தியுள்ளது.
உரிமம் பெற்ற செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை அக்டோபர் மாதம் முதல் பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களுக்கு, சென்னை மாநகராட்சி (GCC) ரூ. 10,000 அபராதம் விதிக்கவுள்ளது. அந்த விலங்கின் உடலில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோசிப் (microchip) மூலம் அதன் உரிமையாளர் கண்டறியப்படுவார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மைக்ரோசிப் (microchip) பொருத்தப்பட்ட தங்கள் செல்லப்பிராணிகளைக் கைவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
"அடுத்த வாரம் முதல் அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கப்படும்," என்று மாநகராட்சி கால்நடை மருத்துவர் கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ரூ. 25,000 அபராதம் விதிக்க மாநகராட்சி திட்டமிட்டிருந்தது; ஆனால் பொது சுகாதாரம் மற்றும் வரிவிதிப்பு-நிதி நிலைக்குழுக்கள் இதனை ரூ. 10,000-ஆகக் குறைக்கப் பரிந்துரைத்தன.
அனைத்து செல்லப்பிராணிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, பொது இடங்களில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்படும். மேலும், உரிமம் பெறாத செல்லப்பிராணி நாய்களுக்கு 5,000 ரூபாயும், சங்கிலி அல்லது கயிறு இன்றி அழைத்துச் செல்லப்படும் நாய்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
| நிகழ்வு | தொகை |
| பொது இடங்களில் செல்லப்பிராணிகள் தனியாக இருந்தால் | ரூ.10,000 |
| உரிமம் பெறாத செல்லப்பிராணி நாய்களுக்கு | ரூ.5,000 |
| கயிறு இன்றி அழைத்துச் செல்லப்படும் நாய்களுக்கு | ரூ.500 |
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறப்பு முகாம் மூலம் 11.08.2026 முதல் 25.09.2026 வரை, 1,00,378 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறப்பு முகாம் மூலம் 11.08.2026 முதல் 25.09.2026 வரை, 1,00,378 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளன.#ChennaiCorporation | #HeretoServe | #RabbisVaccination@MawsTamilNadu pic.twitter.com/ES0YyXeS2g
— Greater Chennai Corporation (@chennaicorp) September 25, 2026
உரிமம் பெற்ற நாய் அல்லது பூனை சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டால், மாநகராட்சி அதிகாரிகள் அதன் மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்து, பதிவு செய்யப்பட்ட உரிமையாளரைக் கண்டறிவார்கள். மண்டல கால்நடை மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் அல்லது சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மாநகராட்சியின் POS இயந்திரங்கள் வழியாக இந்த அபராதம் வசூலிக்கப்படும். இந்த அபராத நடவடிக்கை குறித்து செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பையும் மாநகராட்சி வெளியிடும்.
ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதைத் தடுக்கவும் மைக்ரோசிப் பொருத்துவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற ஒவ்வொரு விலங்கையும் அதன் உரிமையாளருடன் இணைக்க, மாநகராட்சி மைக்ரோசிப்களைப் பயன்படுத்துகிறது. இந்த மைக்ரோசிப்பில் உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் தடுப்பூசி விவரங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.