Bank Strike Deferred Latest News: இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று முதல் தொடங்க இருந்த நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் மூன்று நாள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) நேற்றிரவு (செப். 27) அறிவித்தது.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நேற்றிரவு 9.30 மணிக்கு IBA மற்றும் UFBU இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஞ்சிய சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிப்பது குறித்து விவாதிப்பதற்காக IBA மற்றும் UFBU உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழு சாத்தியமான அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, அனைத்து தரப்பினருக்கும் முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கும் ஏற்புடையே ஒரு தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bank strike deferred after the meeting between the Indian Banks' Association (IBA) and the United Forum of Bank Unions (UFBU) tonight. pic.twitter.com/SPJUwp63p2
— ANI (@ANI) September 27, 2026
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை மற்றும் 2 நாட்கள் விடுமுறை என்ற கோரிக்கையை வங்கி ஊழியர்கள் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்கேல் IV மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான பிஎல்ஐ திட்டம் தொடர்பாக, தொழிற்சங்கங்கள்/கூட்டமைப்புகளின் கருத்துக்களை களையும் வகையில் அத்திட்டத்தில் திருத்தங்களை அரசுக்கு முன்மொழிய IBA உடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சிய கோரிக்கைகள் குறித்து விரைவான தீர்வு காண இரு தரப்பினரிடையே விவாதிக்கப்படும் என்றும் இவற்றின் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒத்திவைக்க UFBU ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து விரிவான சுற்றறிக்கை விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செப். 28) முதல் புதன்கிழமை வரை (செப். 30) வரை நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு வங்கி தொழிற்சங்கங்கள் நடத்திவரும் நீண்ட போராட்டத்தின் முக்கிய நகர்வு இதுவாகும். வங்கிகளுக்கு ஐந்து நாள் வேலை நாட்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான புதிய ஊக்கத்தொகை திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட வங்கி ஊழியர்களின் முக்கிய இரண்டு கோரிக்கைகளாகும்.
திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 8 லட்சம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சுமார் 1.81 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படும் அபாயம் எழுந்தது.
அத்தியாவசியக் கிளைப் பணிகள் நிறைவுசெய்யும் வகையில், அனைத்து பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திறந்திருந்தன.
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளை மூடுவதற்கு கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு பதிலாக ஊழியர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 40 நிமிடங்கள் கூடுதலாக பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.