IND vs NZ 2nd Test, Mohammed Siraj: இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. டி20ஐ, ஓடிஐ தொடர் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்திய அணி டி20ஐ தொடரை 3-2 என்ற கணக்கிலும்; ஓடிஐ தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டி டிராவில் முடிந்தது.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று (நவ. 27) தொடங்கியது.
கிறிஸ்ட்சர்ச் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை மேற்கொள்கிறது. நியூசிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்திய அணி ஒரே ஒரு பந்துவீச்சு மாற்றத்தை மட்டும் மேற்கொண்டது.
அந்த வகையில், முதல் போட்டியிலேயே இந்திய பிளேயிங் லெவனில் இருந்து ஜடேஜா, சிராஜ் ஆகியோர் ஓரம்கட்டப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே, சிராஜ் இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது.
பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் குர்னூர் பிரார் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். குறிப்பாக, குர்னூர் பிராருக்கு இதில் அறிமுக டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடும் 321வது வீரர் ஆவார். பும்ரா, அன்சுல் கம்போஜ், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் பிளேயிங் லெவனில் தொடர்ந்தனர்.
சிராஜ், ஜடேஜா மீண்டும் புறக்கணிக்கப்பட்டனர். கேப்டன் சுப்மான் கில் - தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரின் பிளேயிங் லெவன் தேர்வு மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அஸ்வின், ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் சிராஜ் இன்றைய போட்டியில் சேர்க்கப்படாதது குறித்து தங்களின் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இவை ஒருபுறம் இருக்க, நேரலை வர்ணனையில் ஈடுபட்டு வந்த இந்திய மூத்த வீரர் முரளி கார்த்திக், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாத வருத்தத்தில் முகமது சிராஜ் அழுகிறாரா என கேள்வி எழுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது. டாஸ் போட்ட பின்னர் தொலைக்காட்சி ஒளிபரப்பில், சிராஜ் கருப்பு கண்ணாடியில் நடந்து வருவதை பார்த்து, முகமது சிராஜ் வருத்தத்தில் இருக்கிறாரா என நேரலையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
No Siraj in the XI again! 👀 Our #ExtraaaInnings panel isn't mincing words about his omission. Watch the HERO VIDA India Tour of New Zealand, 2nd Test, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #NZvIND https://t.co/MGpL4RReX6
— Sony Sports Network (@SonySportsNetwk) November 26, 2026
"அவர் அழுகிறாரா? ஏனென்றால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படும் வீரர். சில வீரர்களுக்கு அவர்கள் நீக்கப்படும் போது எந்த பிரச்னையும் இருக்காது, ஆனால் ஒரு சிலருக்கு கண்டிப்பாக விளையாட வேண்டும் என தோன்றும். அவர்களுக்கு காலில் வலியிருந்தாலும் சரி, அவர்களுக்கு தலைவலித்தாலும் சரி அதை கண்டுகொள்ள மாட்டார்கள், அவர்கள் முழுமையாக தங்களை அர்ப்பணித்துவிடுவார்கள்... சிராஜை போல..." என பேசியிருந்தார்.
தொடர்ச்சியாக அவர், "சில நேரங்களின் உங்களின் மனம் புண்பட்ட உணர்ச்சியை மறைக்க நினைப்பீர்கள், ஓடிஐ தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. மேற்கு இந்திய தொடரிலும் கூட அவர் நீடித்த யோசனைக்கு பிறகே விளையாடினார்.
இது வீரர்களை மனதளவில் காயப்படுத்தும். அவர் நல்ல பார்மில் இல்லை என்றாலோ அல்லது வலைப் பயிற்சியில் சிறப்பாக பந்துவீசவில்லை என்றாலோ ஏன் அவரை ஸ்குவாடில் எடுக்கவேண்டும், நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என கேள்வி எழுப்பியிருந்தார்.
முகமது சிராஜ் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசயில் 6வது வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். நடப்பு WTC சுழற்சியில் 43 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கடைசியாக ஆகஸ்ட் மாதம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியிருந்தார். அதில் 4 இன்னிங்ஸில் 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என பொதுவாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இருப்பினும் இலங்கையில் மைதானங்கள் பெருமளவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருந்தன. சிராஜ் இலங்கை தொடரில் 44 ஓவர்களை வீசியிருந்தார். பிரசித் கிருஷ்ணா 58.5 ஓவர்களை வீசி 4 இன்னிங்ஸில் 7 விக்கெட்டை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
துலீப் டிராபி, ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடிய சிராஜ் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் விளையாடி 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.