இந்தியாவின் பிரபல டி20 தொடரான ஐபிஎல், வரும் 2027ஆம் ஆண்டில் அதன் 20வது சீசனை எட்ட உள்ளது. 2027 சீசனுக்கு பின்னர் 2028ஆம் ஆண்டில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. தோனியின் கடைசி சீசனாக கூட இது இருக்கலாம்.
எனவே, 2027 ஐபிஎல் தொடரின் மீது ஏற்கெனவே பலத்த எதிர்பார்ப்புகள் இருக்கும் சூழலில், தற்போது ரோஹித் சர்மா குறித்த புதிய அப்டேட் வெளியாகி எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது.
ரோஹித் சர்மா 2011ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2013 சீசனின் பாதியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி பொறுப்பை ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து ரோஹித் சர்மா பெற்றார்.
2013ஆம் ஆண்டில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது. 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறை இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது, இவை அனைத்தும் ரோஹித் சர்மாவின் தலைமையில் வென்றதுதான்.
இதில் 2013, 2015, 2019 என மூன்று சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்திதான் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 163 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கும் ரோஹித் சர்மா, 87 போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். வெற்றி சதவீதமும் 55.82 ஆகும்.
ஆனால், 2021 முதல் 2023 சீசன் வரை தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்து வந்தது. 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு வந்தும், 2024 சீசனில் ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஸியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்படைத்தது.
அதுவும் குஜராத் டைட்டன்ஸ் அணியல் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்து மும்பை இந்தியன்ஸ் அவரை கேப்டனாக்கியது. ஆனால் அவராலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று தர முடியவில்லை.
2024, 2025, 2026 என கடந்த மூன்று சீசன்களில் 2025 சீசனில் மட்டுமே குவாலிபயர் 2 சுற்றுக்கு மும்பை அணி தகுதிபெற்றது. 2024 சீசனில் 10வது இடத்திலும், 2026 சீசனில் 9வது இடத்திலும்தான் மும்பை இந்தியன்ஸ் அணி நிறைவு செய்தது.
மும்பை இந்தியன்ஸின் தொடர் தோல்வி காரணமாக ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்ஸியை திரும்பப் பெற அணி நிர்வாகம் திட்டமிட்டதாக தகவல்கள் கூறப்பட்டு வந்தன. அதிலும் ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இருக்கும்போது யாருக்கு கேப்டன்ஸி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்ஸி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தற்போது இந்திய அணியிலும் இல்லை, பேட்டிங் பார்மிலும் இல்லை. திலக் வர்மா இளம் வீரராகவும், அடுத்த கேப்டனாக பார்க்கப்படுகிறார். ஜஸ்பிரித் பும்ராவின் பிட்னஸ் காரணமாக அவருக்கும் கேப்டன்ஸியை வழங்குவதற்கு மும்பை இந்தியன்ஸ் தயங்குகிறது. எனவே, ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்ஸி பொறுப்பை வழங்க அணி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹர்திக் பாண்டியா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் டிரேட் குறித்து மும்பை இந்தியன்ஸ - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தங்களின் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட வேண்டும் என்பதால், அதற்குள் இந்த டிரேட் இறுதி செய்யப்படும என தெரிகிறது.