Tamil Nadu Power Cut Issue, Anbumani Ramdoss: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது மின்தடை பிரச்னை சீரடைந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் பிரச்னை முழுமையாக சீரடையவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றர். நேற்றிரவு விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற கூட்டத்திலும், வேலூரில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்தடை என தொடர்ந்து சமூக வலைதளங்களில் மின்வெட்டு குறித்த புகார்களை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், செல்பேசி வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டியளிக்க வேண்டிய நெருக்கடி உள்ளதாகவும், தமிழகத்தில் வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அன்புமணி அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில், "வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் செல்பேசி வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது" என பதிவிட்டு சாடி உள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் மின் தேவை குறித்த புள்ளிவிவரங்களையும் அன்புமணி அதில் குறிப்பிட்டுள்ளார். "தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை, வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்" என தெரிவித்துள்ளார்.
செல்பேசி வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டியளிக்க வேண்டிய நெருக்கடி: தமிழகத்தில் வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை!
வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் செல்பேசி வெளிச்சத்தில்…— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 14, 2026
சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்றும்; ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை என்றும் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
"பொதுவாக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடை படுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்றுதான் பொருள்" என செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் நடந்த நிகழ்வை அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் மின் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அன்புமணி, போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது என்றும் அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்; ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அன்புமணி சாடி உள்ளார். மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, செங்கோட்டையன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்தடை குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அளித்துள்ள விளக்கத்தில், "அமைச்சர் வருகையின்போது வேலூர் சர்க்யூட் ஹவுஸ் மின்மாற்றி ஃபியூஸ் பழுதடைந்தது.
இன்று காலை 11.00 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வருகையின் போது, வேலூர் சர்க்யூட் ஹவுஸ் மின்மாற்றி ஃபியூஸ் பழுதடைந்தது. உடனடியாக PWD துறை பணியாளர்களால் மாற்று மின் விநியோகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது. https://t.co/NMGmXjY4XE
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) September 14, 2026
உடனடியாக பொதுப்பணித்துறை பணியாளர்களால் மாற்று மின் விநியோகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது" என தெரிவித்துள்ளது.