ஈரோடு மாவட்டம் கோபி ஏரிஸ் நகரைச் சேர்ந்தவர் திலீபன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், பெருந்துறையைச் சேர்ந்த அருணா என்பவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டுப் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அருணா, கோபியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. திலீபனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலீபனுக்கும், அருணாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அருணா வீட்டில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.