சென்னை ராயபுரத்தில் மின்வெட்டு, குடிநீர், சாலையில் தேங்கும் கழிவு நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை ஒருமையில் பேசி மிரட்டும் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி 48வது வார்டு பாண்டியன் தியேட்டர் டி பி கே தெருவில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் ராயபுரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய்தாமு தனது சகாக்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்தாமுவிடம் தங்கள் பகுதியில் தினமும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது, சாலையில் கழிவுநீர் ஓடுகிறது என புகார் அளித்துள்ளனர்.