சென்னை அடுத்த ஒரகடத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள டெய்ம்லர் இந்தியா வணிக வாகனங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தொழிற்சாலை மற்றும் ஆராய்ச்சி மையத்தை, சென்னைக்கு வருகை தந்த ஜெர்மன் தூதர் வியெக் பார்வையிட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர் டிரக் நிறுவனத்தின் முழு உரிமையிலான துணை நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கிய இந்த ஆலையில், இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான சரக்கு லாரிகள் மற்றும் பேருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து வாகனங்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, 92 சதவீத உதிரிபாகங்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப்படுவது இந்த ஆலையின் முக்கியச் சிறப்பாகும். மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த, காலநிலை பாதிப்பைக் குறைக்கும் உற்பத்தி முறைகள் பின்பற்றப்படுவதாக ஜெர்மன் தூதர் குறிப்பிட்டுள்ளார்.