சுங்கக் கட்டணத்தைச் செலுத்தாமல் தப்பிக்க நினைப்பவர்களுக்கு இனி கடும் அபராதம் காத்திருக்கிறது. தடுப்புகள் இல்லாத தானியங்கி சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்லும் வகையில், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சில வாகன ஓட்டிகள், தங்களது பதிவு எண் பலகையை மறைத்தோ, அதில் மாற்றம் செய்தோ சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க, வழக்கமான சுங்கக் கட்டணத்தைவிட 4 முதல் 8 மடங்கு வரை கூடுதலாக வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் திருத்தம் கொண்டுவர சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தயாராகி வருகிறது. இந்தக் கூடுதல் கட்டணம், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.