சென்னையின் முக்கியமான இயற்கைச் சூழல்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்கும் விவகாரத்தில், தமிழக ஈரநில ஆணையம் புதிய முன்மொழிவை முன்வைத்துள்ளது. சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள தாக்க மண்டலம் முழுவதும் கட்டுமானங்களுக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பகுதியின் நில அமைப்பு மற்றும் நீரியல் தன்மைகளுக்கு ஏற்ப கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 36 சர்வே எண்களில் அமைந்துள்ள 128.19 ஹெக்டேர் நிலப்பரப்பு இடைக்கால தாக்க மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நில உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.